
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். எனினும், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் மற்றும் எத்தனை பேர் பாதுகாப்புப் படையினர் என்ற தனித்தனி விபரங்களை அவர் வெளியிடவில்லை. அத்துடன், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் “பயங்கரவாதிகள்” இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானில் நிலவும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியே இந்தப் போராட்டங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஈரானிய மதத் தலைவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுச் சவாலாகும். இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள சூழலில் இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.

