
ஊருக்கு வருவது ஏன் புலம்பெயர்ந்த எங்களுக்கு இவ்வளவு அலாதியான மகிழ்ச்சி தருது என்பதை நான் நிறையத் தரம் யோசிச்சுப் பாத்திருக்கிறன்…
வேற என்ன… அந்தப் புழுதி மண், கால்களில பட்டு, சுவாசத்தில் கலந்து மனதை நிறைச்சிடுது. அந்த மண்ணை உரஞ்சி உரஞ்சி கழுவுறதிலை ஒரு மனநிறைவு. அந்த மண்ணில கால் புதைச்சு நடக்கிறதிலை ஒரு மகிழ்ச்சி.
நான் சின்னப்பெடியனாக இருக்கிற காலத்திலை அப்பு அடிக்கடி சொல்லுறது தான், “சொந்த மண்ணைப்போல ஒரு ஆனந்தம் வேற ஒண்டும் இல்லை மோனை, எங்கதான் ஓடி ஓடி உழைக்கப் போனாலும் இந்த மண்ணில சாய்ஞ்சு கிடக்கிற நேரம் கிடைக்கிற இன்பம் வேற எதிலையும் இருக்காது” என்பது.
அவர் சொன்னதின்ர அர்த்தத்தை இப்ப நல்லா உணரக்கூடியதாக இருக்கு. நான் ஊருக்கு வந்து, பதினைஞ்சு நாட்கள் ஓடிப்போயிருந்தன. அன்று ஒரு வெள்ளிக்கிழமை. நல்ல மரக்கறிச் சாப்பாடு. ருசியா சமைக்கிறதிலை என்ர அம்மாவையோ தங்கச்சிமாரையோ அடிக்க ஏலாது. அப்பிடி இருக்கும் சாப்பாடு.
நல்ல குத்தரிசி சோறு, கடலை கத்தரிக்காய் பிரட்டல், கீரை, பருப்பு, வெண்டிக்காய் பொரிச்ச குழம்பு, நீத்துக்காய் சொதி, தக்காளிப்பழம் சம்பல், அப்பளம், மோர்மிளகாய், தயிர் என்று அமோகமாக இருந்தது சாப்பாடு. வழமையை விட கொஞ்சம் கூடவே சாப்பிட்டன்,
“வடிவா சாப்பிடுறேல்ல” என்பது அம்மாவும் வீட்டவர்களும் எப்பவும் சொல்லுற குறைதான். அதுக்கு பதில் சொல்லுற மாதிரி சாப்பிடுவம் என்றால், மனம் நிறைஞ்சு கிடக்கிறதாலையோ என்னவோ வயிறு பசிக்கிறது சரியான குறைவு. அன்று தான் போனதுக்கு, கொஞ்சம் வடிவா சாப்பிட்டன்.
சாப்பிட்டு இருக்க, பிரபா மாமாவும் பெடியளும் சேர்ந்து வந்தினம்,
“என்ன கூட்டமா வாறியள்?” என்றேன்.
“இது தானா சேர்ந்த கூட்டம்” என்றான் சாந்தன்.
“ஓ… நல்ல விசயம் தானே… தானா சேர்ந்தால் தான் நிறைய நல்ல விசயங்களைச் செய்யலாம்” என்றேன் நான்.
“அதுசரி… எல்லாரும் எங்க வெளிக்கிட்டாச்சு…? என்று கேட்டேன்.
“வயலுக்கு போறம் ” ராயூ சொன்னதுதான் தாமதம், விருட்டென்று எழும்பினன். உள்ளபோய் ரீசேட்டை மாத்திக்கொண்டு, வர,
“எங்கயோ வெளிக்கிட்டியோ? ” என்று கேட்ட அம்மம்மாவிடம்
“ஓமோம்… வெளியில போறன் ” என்றேன்.
“என்ன சறத்தோடையோ… போய் உடுப்பை மாத்திக்கொண்டு போ…” என்றா.
“ஏனணை… சறத்தோட போனால் என்ன…?” என்றேன்.
“வெளிநாட்டிலை இருந்து வந்திட்டு சறத்தோட வெளியிலை போறதே… என்ன கதை சொல்லுறாய்…” என்று சொன்னா.
” அங்க வெளிநாட்டிலை படுறபாடு எங்களுக்கு தானே தெரியும்… ” என்றேன்.
“ஓ…. அதெல்லாம் எங்களுக்கு தெரியும், நீ உடுப்பு மாத்திக்கொண்டு போ…” கண்டிப்பாக வந்தது அவவின் குரல்.
“சரி… இனி அடம்பிடிக்க ஏலாது எண்டுபோட்டு, உள்ள போய் அரைக்காற்சட்டை ஒன்றைப் போட்டுக்கொண்டு வந்தேன்.
“சரி… சரி.. வாங்கோ போவம்… “என்றேன் மாமாவிடம்.
“எங்கயடா, வயலுக்கு வரப்போறியோ?” மாமா கேட்டதுக்கு
“ஓம் மாமா… நானும் வாறன்… வாங்கோ போவம்…” என்றபடி ஆட்டோவில் ஏறினேன்.
வந்த பெடியளுக்கு ஒரே மகிழ்ச்சி. ரெண்டு ஆட்டோவில எல்லாருமா வயலுக்கு வெளிக்கிட்டம். போற வழி எல்லாம் நான் சைக்கிள்ள ஓடித்திரிஞாச தெருக்கள் தான். மனம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கத்தொடங்கியது.
எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் படம் போல மனதில் ஓடத்தொடங்கின.
அப்புவோட கதைச்சுக்கொண்டு கை பிடிச்சு நடந்த காலம் தொடங்கி, மாமாக்களோட விளையாட்டாக வயலுக்கு ஓடிப்போனது எல்லாம் அழகான சித்திரம் போல விரிந்தன.
” விவசாயம் தான் மனுசனுக்கு உயிர் மூச்சு, விதை நெல்லை மதிக்காதவன் விவசாயி இல்லை… ” என்பார் அப்பு. புரியாத வயதிலும் அப்புவின் கையைப் பிடிச்சுக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டே நடப்பன் நான்.
வெட்டின வயல், பழுப்பு நிறத்தில் காய்ஞ்சுபோய் கிடந்தது. நெற்கதிரின் அடித்தடல் குத்திட்டபடி நின்றது. கால்களை நிலத்தில் வைத்ததும் சர்ரென்று வாளின் வேகத்தில் உள்ளங்காலைப் பதம் பார்த்தது.
சடாரென்று காலை எடுத்த நான் கழற்றிய செருப்பை மீண்டும் போட்டுக்கொண்டேன். “வெளிநாட்டு வாழ்க்கையில் மென்மையாகிப்போன பாதங்களை இனி என்ன தான் செய்வது…சின்ன கீறல் கூட தாங்குதில்லை…” எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
வயல் வெளியைச் சுற்றி மரங்களடர்ந்திருந்த காட்சி கண்ணுக்கு இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது அந்த பின் மாலைப்பொழுதில். என் கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் படம்பிடித்துக் கொண்டேன். ஏதோ ஒரு நாளில், கனேடிய மண்ணில் உள்ள என் வீட்டுக்கட்டிலில் படுத்துக்கொண்டு பனிச்சாரலின் அழகில் நனைந்தபடி, என் ஊரின் வாசங்களை நுகரலாமே… அந்த பேரின்பத்துக்கு எதுவும் நிகரில்லையே…
என் மனம் இப்படி எல்லாம் நினைத்துக்கொண்டது.
‘புழுதி விதைப்பு தான் விதைக்க வேணும்’ என்றபடி மாமாவுவும் மற்றவர்களும் அந்த சருகுகளுக்கு தீவைத்துக் கொண்டிருந்தார்கள்.
“விதை ஒன்றுக்குள் சருகு இருக்கும் இரகசியம்தான் வாழ்க்கை ” என யாரோ எழுதிய வரிகளை வாசித்த ஞாபகம் உள்ளத்தில் ஓடியது. எவ்வளவு பெரிய உண்மை அது, விதை தானே பின்னாளில் சருகாகிறது….
மஞ்சள் வெயில் பட்டதால் பொன் நிறத்தில் மின்னியது வைக்கோல்.
“முதல் எல்லாம் மாம்பழம், அன்னமுன்னாப்பழம் பழுக்க வைப்பதற்கும் கோழி அடை வைக்கவும் இந்த வைக்கோல் தான் அள்ளிக்கொண்டு போவம். இப்ப ஆர் வைக்கலுக்குள்ள வைச்சு பழுக்க வைக்கினம்…” என்றேன் நான்.
“ஓமடா…மஞ்சள் நிறத்தில கடைகளில குவிச்சிருக்கிற பழங்கள் மருந்தடிச்சு வடிவா வைச்சிருக்கிறாங்கள்… அதைத்தான் ஓடி ஓடி வாங்கிறம் ” என்றார் மாமா.
“அது பார்வைக்கு அழகே தவிர உடலுக்கு எவ்வளவு தீங்கு …தெரியுமே… வீடுகளிலை மாமரம் நிண்டால் புடுங்கி பழுக்க வைச்சு சாப்பிடவேணும்…” நான் சொன்னதும்,
“அட… போங்கோ அண்ணா, இப்ப மாங்காய் முத்துறதுக்கு முன்னமே காசுக்கு வாங்க வந்திடுவாங்கள், மரத்தோட தீர்த்து குடுத்திட்டு பேசாமல் இருக்கிறதுதானே எங்கட சனம் செய்யிற வேலை “என்றான் சாந்தன்.
“எங்கட இயற்கை வளங்களின்ரை அருமை இங்க சரியா தெரியேல்ல, வெளிநாட்டிலை இருக்கிற எங்களுக்கு தான் அதின்ரை அருமை விளங்கும் ” என்றேன்.
“நீ சொல்லுறது சரிதானடா” என்றார் மாமா.
பற்றி எரிந்து கொண்டிருந்தன அடிச்சருகுகள். கண்களை முழு வயல் நிலத்தையும் சுற்றி ஓட வகட்டேன்.
‘தூரத்தில் அப்பு நின்று கொண்டு கையை அசைப்பது போலத்தோன்றியது எனக்கு. அப்புவுக்கு வயலென்றால் காணும்…’
” சரி.. வாங்கோடா போவம்… ” பிரபா மாமா கூப்பிடவும், ஏதோ ஒரு மனச்சுமையோடு ஆட்டோவில் ஏறினேன்.
சுரேஷ் தர்மா
