
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைத் திருத்தத்தை மேற்கொண்டது.இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் லீற்றொன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 279 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.அத்துடன், மண்ணெண்ணெய் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 182 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 340 ரூபாவாகவும், சுப்பர் டீசல் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 323 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.எனினும், அதிகம் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தற்போதைய விலை அதிகரிப்பானது பேருநது கட்டணங்களை உயர்த்தும் அளவுக்கு பாரிய தாக்கம் செலுத்தவில்லை என்பதால், கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.அதேபோல், அகில இலங்கை மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பாடசாலை சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
