
அனைத்து மக்களும் தமது சொந்த மண்ணில் அக, புறச் சூழலில் சுதந்திரத்துடன் வாழும் நிலையை உருவாக்குவதும் உறுதி செய்வதுமே சுயநிர்ணயம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நோக்கினால், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு நந்நிலையை காண்கின்றனரா என்பது பற்றி நாம் சற்று பார்ப்போம்.
தமிழ் மக்கள் எப்போதும் தன்னுரிமை, சுதந்திரம், சுய ஆட்சி என்பவை பற்றி சிந்திக்க கூடாது என்பதில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசமைப்புகள் மிகவும் முனைப்புடனே செயற்பட்டு வருகின்றன.
அவ்வாறு அவை சிந்திப்தன் விளைவாகவே பயங்கரவாத தடைச்சட்டம் பல்வேறு வகையில் அமுலாக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழர்களின் விடயத்தில் அரசாங்கம் ஒருதலைப்பட்டமாக காரியங்களைச் செய்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டம் பேராபத்து நிறைந்தது என்றும் ஆட்சிக்கு வந்த பின்னர், அதனை நீக்குவோம் என்றும் கூறிய தற்போதைய என். பி. பி அரசாங்கம், இன்று, நாளை என இழுத்தடித்து அதனை நீக்காமல் இருப்பதுடன் புதிய சட்டமும் வரவுள்ளது.
இப்புதிய சட்டமானது, நாட்டைப் பாதுகாப்பதற்காக அல்லாமல், அரசைப் பாதுகாக்கும் கருவியாகவே இருக்கப்போகும் ஒன்றாகும்.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் இத்தடைச்சட்டமானது, ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்களால் தற்காலிகமானதாக கொண்டு வரப்பட்டு, பின்னர், நிரந்தரமாக உள்ள ஒன்றாகும். இது தமிழர்களை முழுக்க முழுக்க பாதிக்கின்ற, பலி கொள்கின்ற சட்டம்.
நீதியற்ற, சமத்துவமற்ற ஒரு அடக்குமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குரலே, இவ்வாறு ஒரு சட்டத்தின் மூலம் அடக்கி ஆளப்படுகிறது.
யுத்தம் முடிந்த பின்னரும் கூட, தமிழ் மக்கள் தமது எண்ணங்களையோ உணர்வுகளையோ முறையாக வெளிப்படுத்த இயலாதவாறு முகநூல் போன்ற சமூக வலத்தள பதிவுகள் மற்றும் புலனம் போன்றவற்றில் உள்ள குழுக்களில் பகிரும் தகவல்கள் அவதானிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் இன்று வரை தொடர்கின்ற ஒன்று தான். இது ஒரு வகையில் அச்சத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் உத்தி ஆகும். மக்கள் மத்தியில் பய உணர்வை உண்டாக்கி விட்டால், அவர்கள் கேள்வி எழுப்பமாட்டார்கள் என்கிற எண்ணத்தின் வடிவமே ஆகும்.
வெறுமனே, வீதி புனரமைப்போடும் வீட்டுத்திட்டத்தோடும் நிவாரணங்களோடும் நின்று விடவேண்டும் என்பதற்கான அறைகூவலாகவே இது பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசினால் வெளியிடப்பட்டுள்ள PSTA சட்டவரைபானது அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கும் அது எச்சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாமல் இருப்பதற்குமான வலுவான காய்நகர்த்தலே ஆகும். இது ஒரு வகையில் ஐனநாயக பக்கத்தை, இராணுவ மயமாக்கும் திட்டத்தின் ஒரு வெளிப்படுத்தலாகும்.
ஒரு நாட்டின் உயர்நீதி மன்றங்கள் கடைப்பிடிக்கும் வழிநடத்தும் கொள்கைகள், கோட்பாடுகள் தான் அந்த நாட்டின் ஒருமைப்பாட்டினையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்துனவாக அமையும். அதைவிடுத்து நாட்டின் நீதித்துறையும் சட்டத்துறையும் மக்களின் அடிப்படை உரிமைச் சட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றாதவிடத்து அது சுயநிர்ணயத்தின் மீது அவர்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்தும்.
இலங்கையின் இனப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்து, 1983 இல் அறிக்கை வெளியிட்ட பன்னாட்டு நீதியாளர் குழு ஈழத்தமிழ் மக்களை “இவர்கள் ஒரு மக்கள்” என அடையாளப்படுத்தியிருந்தமை தமிழ் மக்கள் ஒரு இனமாக ஏற்பளிக்கப்பட்டு சுயநிர்ணயம் என்பதற்கு தகுதியுடைய தேசிய இனம் என்பது நிரூபணமாகிறது.
ஆனால் நாம் முற்று முழுதாக சுயநிர்ணயத்துடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளோமா என்றால் அது கேள்விக்குறியான ஒன்றே ஆகும்.
சட்ட அதிகாரங்களை முப்படையினருக்கும் வழங்குவதனூடாக எதை செய்வதற்கு தீர்மானிக்கப்படுகிறது. அதாவது சாதாரண குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் ஆபத்தான குற்றவாளிகளாக மாற்றப்படலாம் என்கிற எண்ணப்போக்கு மக்கள் மத்தியில் ஏற்படாமல் இல்லை.
எந்த ஒரு அமைப்புகளையோ நிறுவனங்களையோ காலவரையறையின்றி தடை செய்வதற்கான வாய்ப்பினை அரச தலைவருக்கு வழங்குவதோடு குறிப்பிட்ட இடங்களை தடைசெய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமளிப்பதோடு நபர் ஒருவரின் பயணம் பற்றிட முடிவுக்கு நீதிமன்றத்திடம் கோரும் உரிமையை காவல்துறைக்கு வழங்குகிறது.
அவசரகால நிலைகளுக்கான சட்டங்களை நிரந்தரமாகப் பிரயோகிக்கும் வகையிலும் மாற்றம் கண்டுள்ளமையானது மனித உரிமை பற்றிய நிலையை கேள்விக்குட்படுத்துவதோடு இலங்கையின் ஒற்றைஆட்சி முறைமையின் அடிப்படை உரிமை அத்தியாயத்திற்கும் முரணானதாகவே இது காணப்படுகிறது.
நாடு பாதுகாக்கப்படுவதைக் காட்டிலும் அரசு பாதுகாக்கப்படுவதாகவே இதன் சகல பிரிவுகளும் உள்ளன. அதோடு எந்த ஒரு நிலையிலும் அரசாங்கத்தை விமர்சிக்கவோ அல்லது மாற்றவோ இயலாத வகையிலான தூரநோக்காகவும் நாம் இதனை நோக்க முடியும்.
தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது சிங்கள ஆளும் தரப்பினரினரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. குறைந்த அதிகாரங்களைக்கொண்ட அதிகார அமைப்பை வழங்குவதற்கு கூட அவர்கள் தயாரில்லை என்பது நாம் கண்கூடாகப் பார்க்கின்ற விடயமே ஆகும். இதுவரை காலமும் தமிழர்களுக்கு நீதி வழங்குவது எவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு வந்ததோ அதே மனப்போக்கும் அடக்குமுறையுமே இப்போதும் தொடர்கின்றது. தமிழ் மக்கள் ஒன்றிணையவோ, எழுச்சி அடையவோ கூடாது என்பதில் சரியான காய் நகர்த்தல்களை மேற்கொள்ளும் இலங்கை அரசானது, பிளவு படுத்தும் உத்தி மூலம் எமது அரசியல் தலைமைகளை மடைமாற்றியும் விலைபேசியும் மாற்றியுள்ளது.தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் பிளவுபட்டு, பதவிகளுக்காக ஒருவரை ஒருவர் கீழ் தள்ளும் நிலைமையை திட்டமிட்டு உருவாக்கி, ஒருமித்த அரசியல் வேண்டுகை என்கிற ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாம் தேசிய இனமாக ஏற்பளிக்கப்பட்டுள்ள நிலையில் எமது ஒருமித்த குரலை மற்றொரு பரிமாணத்தில் அனைத்துலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய வகையில் பாதைகளை உருவாக்கினாலும் தடைகளும் தடங்கல்களும் இடையிடையே குறுக்கிடாமல் விடவில்லை, இனியும் விடப்போவதும் இல்லை, ஆனால்,
ஒரு இனமாக நாம் ஒன்றிணைந்து எமக்கான பாதையைத்திறக்க முன்வருவோமாக இருந்தால் நிச்சயம் அது நல்ல பதிலையே தரும். எமது அரசியல் கட்சிகள் சகல விதமான சிந்தனைகளிலும் இருந்து விடுபட்டு எமது மாவீரர்களின் புனித ஆகுதியை, தியாகத்தை நினைத்து பார்த்தால் எமது விடியல் சாத்தியமாகிவிடும்.