
ஜிந்துபிட்டி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்று, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய சம்பவமானது, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பழனி ரிமோஷன்’ என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியான ‘புஷ்பராஜா’ என்றழைக்கப்படும் ‘பூகுடு கண்ணா’ என்பவரின் நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க மூன்று விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். முன்னதாக கரையோர காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 44 வயதுடைய நபர் உயிரிழந்ததோடு, அங்கிருந்த 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் முகத்தை மூடியிருந்ததோடு, மற்றையவர் உடல் முழுவதையும் கறுப்பு நிற உடையால் மறைத்திருந்தமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் சேர்த்து, இந்த ஆண்டின் முதல் 16 நாட்களில் மாத்திரம் 3 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 4 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

