
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான யுத்தத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு வரலாற்றிலேயே தன்னை விடத் தகுதியானவர் எவருமில்லை எனத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “மக்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் 8 பெரிய போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர்களையும், இந்தியா – பாகிஸ்தான் இடையே வெடிக்கவிருந்த பாரிய மோதலையும் நான் தடுத்து நிறுத்தினேன்,” என ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், வொஷிங்டனில் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் பின்னரே போர் நிறுத்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூட, கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காகத் தமக்கு நன்றி தெரிவித்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். “ஒபாமா பதவிக்கு வந்தவுடன் எதனையுமே செய்யாமல் அந்தப் பரிசைப் பெற்றார். ஆனால், நான் 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் தலா ஒரு நோபல் பரிசு எனக்குக் கிடைக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ட்ரம்பிற்கு வழங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அடுத்த வாரம் வொஷிங்டன் செல்லவுள்ளதையும் ட்ரம்ப் இதன்போது உறுதிப்படுத்தினார். “உயிர்களைக் காப்பாற்றுவதே எனது நோக்கம். அதன் மூலம் பல கோடி மக்களின் உயிர்களை நான் காப்பாற்றியுள்ளேன்,” என ட்ரம்ப் மேலும் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

