
உலகளாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 37 சதவீதத்தை (ஏறத்தாழ 7.1 மில்லியன் வழக்குகள்) முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.’நேச்சர் மெடிசின்’ (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்துப் பல புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் 10 பேரில் 4 பேரை பின்வரும் காரணிகளை மாற்றியமைப்பதன் மூலம் காப்பாற்ற முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.புற்றுநோய்க்கு மிக முக்கிய காரணமாக இருப்பது புகையிலை. இது ஆண்டுதோறும் சுமார் 3.3 மில்லியன் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.ஹெச்பிவி (HPV), ஹெபடைடிஸ் மற்றும் ஹெச்.பைலோரி (H. pylori) போன்ற தொற்றுகள் காரணமாக 2.3 மில்லியன் பாதிப்புகள் ஏற்படுகின்றன.மது அருந்துவதால் ஆண்டுக்கு 7 இலட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.உடல் பருமன், போதிய உடற்பயிற்சியின்மை, புற ஊதாக்கதிர் தாக்கம் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவையும் முக்கிய காரணிகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 45 வீதம் தவிர்க்கக்கூடியவை. ஆனால் பெண்களுக்கு இது 30 வீதமாக உள்ளது. ஆண்களிடையே புகையிலை பாவனை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.ஐரோப்பிய நாடுகளில் புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமன் முக்கிய காரணமாக இருக்க, ஆப்பிரிக்க நாடுகளில் தொற்று நோய்களே (சுமார் 80 வீதம்) பெண்களுக்குப் புற்றுநோய் வர முதன்மைக் காரணமாக உள்ளன.”புற்றுநோய் என்பது முதுமையால் டிஎன்ஏ-வில் ஏற்படும் பாதிப்புகளால் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், 10 இல் 4 புற்றுநோய்களைத் தடுக்க முடியும் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவல்,” என ஐஏஆர்சி (The International Agency for Research on Cancer) ஆராய்ச்சியாளர் மருத்துவர் இசபெல் சோரிஜோமடரம் தெரிவித்துள்ளார்.கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை நாடுகள் தீவிரமாக அமுல்படுத்தினால், புற்றுநோய் பாதிப்பற்ற உலகை நோக்கி நகர முடியும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

