இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

 இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் அவதூறு பிரச்சாரங்கள் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்து தமக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

“நான் முதன்முறையாக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்துள்ளேன்.

இணைய ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளேன். எனது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

இதன்போது, முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் ஞானசார தேரர் பதிலளித்தார்.

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சலே தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆசீர்வாத நிகழ்விலும் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் தாம் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

எனினும், சலே தொடர்பான விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால், அதுபற்றி விரிவான கருத்துக்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகி வந்த காலத்திலிருந்தே அதுகுறித்து தாம் எச்சரிக்கை விடுத்து வந்ததாக தெரிவித்த ஞானசார தேரர், அக்காலத்தில் உரிய தரப்பினர் அந்த எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பலரின் உயிர்களை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் என்றும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், அக்காலகட்டத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து தரப்பினரும் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“ஒரு தரப்பினர் மட்டும் தண்டனைகளை அனுபவிப்பதும், மற்றவர்கள் விடுவிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதே எமது நோக்கமாகும்” என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *