78 ஆவது சுதந்திர தினம்  இன்று – வடக்கு  கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்

78 ஆவது சுதந்திர தினம் இன்று – வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை ‘கரிநாள்’ எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல்வேறு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் இன்று காலை ஆயிரக்கணக்கானோர் திரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.அங்கிருந்து கிளிநொச்சி நகரை நோக்கிப் பேரணி சென்றபோது, சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் இடத்தைக் கடக்க முயன்றனர்.இதன்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றம் நிலவியது.பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் கறுப்பு கொடிகளை ஏந்தி இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.வடக்கு – கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களில் தமிழ் மக்களுக்கான நிலையான மற்றும் கௌரவமான அரசியல் தீர்வு, தமிழ் நிலங்கள் திட்டமிட்ட முறையில் பௌத்தமயமாக்கப்படுவதை உடனடியாக நிறுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவும் இராணுவக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கறுப்பு கொடிகளை ஏற்றித் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.மறுபுறம், கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *