
சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் லிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பொலிஸ் வழங்கிய தகவலின்படி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழியுடன் நேற்று அண்ணாசாலையில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார்.
அப்போது, இருவரும் வணிக வளாகத்தின் லிப்டில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அதே லிப்டில் இருந்த இரு நபர்கள் அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர்.
பெண்களின் சத்தம் கேட்டு லிப்ட் நிறுத்தப்பட்டதுடன், வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர்.
எனினும், அதற்குள் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் இருவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதில், பொதுமக்கள் ஒருவரை மடக்கிப் பிடித்து அண்ணாசாலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் வேளச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் (41) என்பது தெரியவந்துள்ளது.
அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தப்பியோடிய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அண்ணாசாலை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
