
நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து குறித்த நபர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக நிலவும் சந்தேகம் காரணமாக அவர்களைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சில பிரிவுகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வந்துள்ளது.
குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியன கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் சிலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
அதேபோல் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக எதிர்வரும் சில வாரங்களுக்குள் சில முக்கிய அரசியல்வாதிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.