வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் – 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!

வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் – 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!

 தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது கால்நடைப்பண்ணைக்குரிய காணியை தங்களுக்கு வழங்குமாறு கோரி 1001 நாட்கள் போராடிவரும் தம்மை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை.

கொழும்பில் உள்ள மகாவலி அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கடந்த 10 ஆம் திகதி தம்முடன் ஒரு முக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் மேய்ச்சல் தரைக்கு எவ்வளவு நிலம் ஒதுக்குவது, எங்கு ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படவிருந்தது.

ஆனால், திட்டமிட்டபடி அந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை. கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக் குளங்களை அமைத்துத் தருவதாகவும், பாதைகளைச் சீரமைத்துத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்ற போதிலும், இன்றுவரை எந்தவொரு பணியும் ஆரம்பிக்கப்படவில்லை.

போராட்டப் பகுதியில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்து, ஜனாதிபதியின் வார்த்தைகளை நம்பி தங்கியிருக்கும் தங்களுக்கு, தொடர்ச்சியாகப் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.

அப்பகுதியில் காடுகளை அழித்துச் சட்டவிரோத பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள், பண்ணையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்துவதுடன், தங்களது வாழ்வாதாரத்திற்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *