
யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீர் கொழும்பில் உள்ள கார்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் காரினை பெற்ற நபர் ஒருவர், அதனை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் அடகு வைத்து சுமார் 80 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளார்.இந்நிலையில், உரிய காலப் பகுதியில் வாடகைக்கு எடுத்த காரினை நிறுவனத்திடம் ஒப்படைக்காத காரணத்தினால் நிறுவனத்தினர் வாடகைக்கு பெற்ற நபர் மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.தொடர்புடைய வாடகை காரை யாழ்ப்பாணத்தில் பணம் கொடுத்து பெற்றவர் தொடர்பில் நீர் கொழும்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.அதனைதொடர்ந்து, வேறு வழியின்றி வாடகைக் காரினை பணம் கொடுத்து பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், யாழ் நகர்ப் பகுதியில் குறித்த காரினை நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.காரினை மீட்ட யாழ்ப்பாண காவல்துறையினர் அதனை நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
