
2026 ஆம் ஆண்டுக்குரிய பிரதான பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சையை நாளை (11) நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேயின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தமக்குரிய பரீட்சை நிலையங்கள் மற்றும் நேர அட்டவனை தொடர்பில் மேலதிக விபரங்களைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

