
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் அறிவித்துள்ளது.ஹார்வர்ட் பல்கலைக்கழகம் “அமெரிக்காவை வெறுக்கும் செயற்பாடுகளின் மையமாக” (hate-America activism) மாறிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வந்த பட்டதாரி நிலை இராணுவப் பயிற்சிகள், ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் சான்றிதழ் கற்கைநெறிகளை பென்டகன் நிறுத்திக்கொள்ளவுள்ளது.இந்தப் பல்கலைக்கழகம் “விழிப்புணர்வு சித்தாந்தங்களின் தொழிற்சாலையாகவும், அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதிகளின் புகலிடமாகவும்” உருவெடுத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.”நீண்டகாலமாக எமது சிறந்த இராணுவ அதிகாரிகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அங்கிருந்து திரும்பி வரும் அதிகாரிகள் இராணுவ வீரர்களாக இல்லாமல், உலகளாவிய மற்றும் தீவிரவாத சித்தாந்தங்கள் நிறைந்தவர்களாகவேத் திரும்புகின்றனர்” என்று பீட் ஹெக்செத் மேலும் தெரிவித்துள்ளார்.எனினும், தற்போது அங்கு கல்வி பயின்று வரும் இராணுவ வீரர்கள் தமது படிப்பை நிறைவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும், எதிர்வரும் இலையுதிர் காலத்தில் இந்த உறவுகள் உத்தியோகபூர்வமாகத் துண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சில ஆராய்ச்சித் திட்டங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டாகச் செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.2010 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சீன அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுமார் 560 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
