காணாமல் ஆக்கப்பட்ட தி.நி.ஜிம்பிறவுண் அடிகளாரின் 20ம் ஆண்டு நினைவுநாள்!

காணாமல் ஆக்கப்பட்ட தி.நி.ஜிம்பிறவுண் அடிகளாரின் 20ம் ஆண்டு நினைவுநாள்!

     தி. நிகால் ஜிம்பிறவுண் அடிகளாரும் அவருடன் சென்ற வெ. விமலதாசன் அவர்களும் இலங்கைக் கடற்படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லைப்பிட்டிக் கடற்படை முகாமுக்குச் சென்றபோது காணாமலாக்கப்பட்டனர். 

     இன்று, இவர்கள் இருவரும் காணாமலாக்கப்பட்ட 20ம் ஆண்டு நினைவுநாள். 

     இந்நாளில் அல்லைப்பிட்டி மக்கள், “எங்கள் தந்தை ஜிம்பிறவுண் எங்கே?” என்ற அமைதிவழி நடை பவனியையும், அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டத்தையும் நினைவுப் பிரார்த்தனையும் முன்னின்று செய்து முடித்திருக்கிறார்கள். 

     ஜிம்பிறவுண் அடிகளார் காணாமலாக்கப்பட்டதன் பின் கடந்த இருபது ஆண்டு நினைவுகளைக் கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறேன். 

     அடிகளார் காணாமலாக்கப்பட்டு ஓரிரு நாள்களின் பின் அவரது இரண்டு இளைய சகோதரிகளையும் கொழும்பில் சந்தித்தேன். 

     அந்தக் கணங்களை எப்படி எடுத்துரைப்பது என்று எனக்குத் தெரியவில்லை! 

     ஒரு விடுதியில் நிற்கிறார்கள். அன்றைய கொழும்புச் சூழலில், தங்கள் சகோதரன் காணாமலாக்கப்பட்ட நிலையில், தங்கள் கவலையை, வேதனையைச் சொல்லியழ முடியாது துடித்த அந்தக் கணங்கள் மிகமிகக் கொடூரமானவை, கொடுமையானவை! 

     அந்த அவலம் நிறைந்த அந்தப் பொழுது இன்னும்தான் என் கண்களில் அப்படியே நிற்கிறது. அவர்கள் இன்னும்தான் அழுதுகொண்டு இருக்கிறார்கள். 

      அடிகளாரின் தந்தை, தாய், இரு சகோதரர்கள் இரு சகோதரிகள் என இவர்கள் அனைவரும் இன்னும்தான் அச்சுமையைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

     தாய், மகனின் இழப்புத் துயர் தாங்காமலேயே படிப்படியாகத் தமது நலத்தை இழந்து இறைபதம் அடைந்துவிட்டார். 

      பிள்ளைகள் இச்சூழ்நிலைகளால் புலம்பெயர, தந்தை தனியாக அவரது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். 

       இது ஒருபுறமிருக்க, 07.09.1996ல் மாணவி கிருசாந்தி குமாரசாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் விசாரணை செய்யப்பட்டு, உண்மைநிலை கண்டறியப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

       இதற்கு முக்கிய காரணம், கிருசாந்தி குமாரசாமியின் குடும்பத்தினர் உள்ளூரிலும் கொழும்பிலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்ததனால், அதன் தாக்கமும் அழுத்தமும் அன்றைய அரசத் தலைவி சந்திரிக்கா குமாரதுங்கவை நேரடியாகச் செயலில் இறங்க வைத்தது. 

      அதனால், கிருசாந்தி குமாரசாமி, அவருடைய தாய், சகோதரன், அயலவர் ஆகியோரின் விவகாரம் சில மாதங்களுள் வெளியே வருவதற்குக் காரணமாக இருந்தது. 

      ஆனால், ஜம்பிரவுண் அடிகளாருக்கு என்ன நடந்தது பற்றிய தகவல் இற்றைவரை வெளியே வரவில்லை! 

     வரக்கூடிய வாய்ப்பு அத்தனையும் இருக்கிறது. காரணம் அவர் காணாமலாக்கப்பட்ட நாளில் நடந்த நிகழ்வுகளும் சாட்சியங்களும் உண்டு. 

     20 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றுகூட, குறிப்பிட்ட அன்றைய நாளில் கடமையில் இருந்த கடற்படை வீரர்கள், உண்மையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் உண்மைகள் வெளிவரும். 

      அப்படியென்றால், ஜம்பிரவுண் அடிகளாரின் விவகாரத்தின் உண்மைநிலை வெளியே வருவதற்கான குறிப்பிடக்கூடிய அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட வில்லை என்று பொருள் கொள்ளலாம்!

     இப்பெரும் ஒரு மத நிறுவனத்தில் பணியாற்றிய குருவுக்கு நடந்த விடயம், எப்போதோ விசாரணை செய்யப்பட்டு, வெளிக்கொணர்ந்திருக்கப்பட வேண்டும்! ஆனால்… 

     ஒருவேளை நிலைமைகள் மாற்றம் பெற்று ஜம்பிரவுண் அடிகளாரின் விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அடிகளாருக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவருவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

     அப்படி உண்மைநிலை வெளிவருகிற பட்சத்தில், அக்குடும்பத்தின்/ அக்குடும்பம் போன்ற குடும்பங்களின் கண்ணீருக்குப் பதில் கிடைக்கும்!

செ. அன்புராசா

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *