
இலங்கை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த விவசாயப் பாடசாலைகளில் நடைபெறும் ‘விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை (NVQ level 6) கற்பதற்காக 2027 / 2029 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. 2026.05.25 க்கு முன்னர் விண்ணப்பங்கள் விவசாயத்திணைக்கள இணையத்தளமூடாக அனுப்பப்பட வேண்டும்.
இப்பரீட்சையானது விவசாயத் திணைக்களத்தின் பரீட்சை பிரிவினால் 2026 ஒக்டோபர் மாதத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரதான சில நகரங்களில் அமைக்கப்படவுள்ள பரீட்சை நிலையங்களில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியானது மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இக் கற்கைநெறிக்கு தேசிய தொழிற்கல்வி தகைமை 6 மட்டம் (NVQ level 6) வழங்கப்படுகின்றது.
கற்கைநெறியின் இறுதியில் உங்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழுடன் விவசாயத்திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில், அரச சார்பற்ற, பகுதி அரச நிறுவனங்களில், தனியார் நிறுவனங்களில், வெளிநாடுகளில் மேற்பார்வையாளர் மட்டத்தில் தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இக் கற்கைநெறியானது விவசாயத் திணைக்களத்தின் அங்குணுகொலபெலஸ்ஸ, கரப்பிஞ்ச, குண்டசாலை, பெல்வெஹர, வவுனியா ஆகிய விவசாயப் பாடசாலைகளில் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான கற்கைநெறியாக மேற்கொள்ளப்படுகின்றது. இக்கற்கை நெறிக்கான காலம் 2 ½ வருடங்களாகும். இதில் 2 வருடங்கள் விவசாயப் பாடசாலைகளில் குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்கமைய பயிற்சி வழங்கப்படும். மேலும் தேசிய பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (NAITA) மேற்பார்வையின் கீழ் 06 மாத காலத்திற்கு தொழில் சார் பயிற்சி ஒன்றினை குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக் கொள்வது கட்டாயமாகும். ஆங்கில மொழியில் மட்டும் நடத்தப்படும் இக்கற்கை நெறியானது முழு நேர உள்ளகக் கற்கைநெறியாகும்.
மாணவர் சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கற்கைநெறியினை கற்பதற்கு தகைமை பெற்றவர்களின் தகைமைகளின் உண்மை நிலை நேர்முகப் பரீட்சை மூலம் பரீட்சிப்பதன் மூலம் விவசாயப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கற்கைநெறிக்கு அனுமதி பெறுவதற்கு காணப்பட வேண்டிய கல்வித் தகைமைகளாக,
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். சிங்களம் / தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களுடன் மேலும் ஒரு பாடத்தில் கட்டாயமாக திறமைச் சித்தி அல்லது அதை விட உயர்வான சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
மேற்கூறிய இரண்டு தடவைகளில் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகளில் ஆங்கிலப் பாடத்திற்கு குறைந்தது சாதாரண சித்தி (S) பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் உயிரியல், இரசாயனவியல் பௌதீகவியல் / விவசாயம் ஆகிய மூன்று பாடங்களுக்கு தோற்றி அதில் ஆகக்குறைந்தது சாதாரண சித்தி (S) 03 இனை ஒரே முறையில் பெற்றிருத்தல் வேண்டும். அல்லது க.பொ.த உயர் தர பரீட்சையில் தொழில்நுட்பவியல் துறையில் கல்வி பயின்று உயிரியல் தொழில்நுட்பம் / பொறியியல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப துறைக்கான விஞ்ஞானம், விவசாயம் ஆகிய மூன்று பாடங்களுக்கு தோற்றி அதில் ஒரே முறையில் மூன்று பாடங்களிலும் குறைந்தது சாதாரண சித்தி(S) பெற்றிருத்தல் வேண்டும்.
முக்கியம் – க.பொ.த உயர் தர பரீட்சையில் உயிரியல் துறை மற்றும் தொழில்நுட்பவியல் துறை ஆகிய பிரிவுகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பாடங்களின் சேர்க்கைகளும் தவிர்ந்த வேறேதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பாடமொன்றினை கல்வி பயின்றிருந்தால் தகைமையாக விண்ணப்பதாரிகள் 2026.05.25 ஆம் திகதியன்று 18 வயதிற்குக் குறையாமலும் 25 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். (அதனடிப்படையில் வயது தொடர்பான தகைமையினை பூரணப்படுத்தும் விண்ணப்பதாரியின் பிறந்த தினமானது 2001.05.25 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னராகவோ 2008.05.25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராகவோ இருத்தல் வேண்டும்.)
இக்கற்கைநெறியானது விவசாயச் செயற்பாடுகளுடன் தொடர்பான செய்முறை பயிற்சிகளை உள்ளடக்கியது. எனவே இக்கற்கைநெறியினை கற்பதற்கு நீங்கள் உடலியல் மற்றும் மனநல ரீதியாக பொருத்தமானவராக இருத்தல் வேண்டும்.
இப்போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரம் நிகழ்நிலை (online) முறை மூலம் மேற்கொள்ளப்படும். விவசாயத் திணைக்களத்தின் www.doa.gov.lk என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க – https://soadip.doa.gov.lk/nvq-6/
விண்ணப்பதாரி க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முதன் முறை தோற்றிய மாவட்டம் அவருக்கு உரித்தான மாவட்டம் என கருதப்படுவதுடன் விண்ணப்பப்பத்திரத்தை பூர்த்தி செய்யும் பொழுது நீங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றிய மாவட்டத்தினை உரிய இடத்தில் குறிப்பிட வேண்டும்.
பரீட்சைக்கான கட்டணம் ரூபா 1300.00 ஆகும். மக்கள் வங்கி பேராதனை கிளையில் விவசாயத் திணைக்களத்தின் இலக்கம் 057100139027201 கொண்ட வருமான கணக்கிற்கு பரீட்சை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பதாரியின் பெயரில் பற்றுச்சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பற்றுச் சீட்டு வழங்கப்பட்ட திகதி, கிளை மற்றும் இலக்கம் விண்ணப்பப்பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப்படிவம் ஆங்கிலத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். விண்ணப்பப்படிவம் தொடர்பாக ஏதும் பிரச்சினைகள் காணப்படின் 081-2388340 / 081-2388341 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். பரீட்சைக்கு செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணத்திற்காகவும் மீளளிக்கவோ, வேறு ஏதேனும் பரீட்சைக்கு மாற்றி அளிக்கவோ முடியாது.
விண்ணப்பப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி நாள் 2026.05.25 ஆகும்.
குறித்த கற்கைநெறி தொடர்பிலான முழுமையான விபரங்களையும் பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். https://soadip.doa.gov.lk/gazzette-nvq6-tamil/
