சங்கீர்த்தன் கைது உணர்த்துவது என்ன!!

சங்கீர்த்தன் கைது உணர்த்துவது என்ன!!

அண்மையில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத்சன் இன்று வழக்கு சாதாரணக் குற்றவியல் சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்க செய்தி.

இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் அனைவரும் இதிலிருந்து ஒன்றினைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள தனிநாட்டுக் கோரிக்கைக்காகப் போராடினாலோ, அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ள அமைப்புக்கு ஆதரவாக எவராவது செயற்பட்டாலோ அவர்கள் மீது இலங்கை அரசின் பயங்கரவாதச் சட்டம் பாய்வதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன என்பதைக் கவனத்தில் வைத்திருப்பது அவசியம்.

இரு தடவைகள் புரட்சிகள் செய்த ஜேவிபியினர் இரு தடவைகளும் புரட்சியில் தோற்றபின்னர், தமது அமைப்பின்
கொள்கைகளை மாற்றி முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டார்கள். இன்று ஜேவிபியின் அரசியல் கட்சியான தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாகவிருக்கின்றார்.

இலங்கையில் 2009இல் முடிவுக்கு வந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் பலியான நிலையில், அவ்வமைப்பின் புகலிடக் கிளைகள் மட்டுமே இன்னும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை. ஜேவிபியினர் போல் தமது அமைப்பின் கொள்கைகளை மாற்றவில்லை. பஞ்சாபின் காலிஸ்தான் அமைப்பினர் எவ்விதம் மேற்கு நாடுகளில் தனிநாட்டுக் கோரிக்கையுடன் இயங்கி வருகின்றார்களோ அவ்விதமே இயங்கி வருகின்றார்கள். அதுவரையில் இலங்கையிலும், சரி மேற்கு நாடுகளிலும், இந்தியாவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்குவதற்கான சாத்தியங்கள் இல்லை.

ஒருவேளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஜேவிபியினர் போல் தம் கொள்கைகளைச் சூழலுக்கேற்ப மாற்றி, இலங்கையின் ஜனநாயக அரசியலில் தம்மை ஈடுபடுத்தினால், மிகவும் இலகுவாக ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்து விடுவார்கள்.

அதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டால் ஒழிய இலங்கையில் புலிகளை அமைப்பினரைக் குறிப்பிட்டு அரசியல் செய்தாலோ, கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ இலங்கை அரசின் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயும். இதனை மனத்தில் வைத்து அங்கு வாழும் ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் செயற்படுவது அவசியம்.

பகிர்வு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *