
வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (28) நடைபெற்றது.
இதன்போது குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் மேலும் குறிப்பிட்டதாவது, 2019ஆம் ஆண்டில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத சுகாதார உதவியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்
இந்தப் பின்னணியையும், பொதுமக்களின் தீவிர அவதானிப்பிலும் இந்த விடயம் இருப்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,550 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில் வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளியும் இறுதித் தெரிவை நேரடியாகப் பாதிக்கும்.
