
பேராசிரியர் சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கை தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சிறீமான் சாயிமுரளி அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின. நிகழ்வை சர்வேஸ்வரா அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்வில் வரவேற்புரையைக் கலாநிதி சி.பத்மராஜா நிகழ்த்தினார். தகைசால் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் ஓய்வுபெற்ற பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களும் வாழ்த்துரையை வழங்கினார்கள். இலங்கைத் தமிழியற் கழகத்தின் தலைவர் கலாநிதி க.இரகுபரன் நூல் வெளியீட்டுரையை வழங்கினார். நூலின் முதற் பிரதியை இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எஸ்.பரமராஜா பெற்றுக்கொண்டார். வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் மதிப்பீட்டுரையை வழங்கினார்.

பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களின் அமுத விழாவை ஒட்டி சிவலிங்கராஜா – சரஸ்வதி தம்பதியினருக்கு அவரது மாணவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவமும் இடம்பெற்றது. இறுதியாக பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் ஏற்புரையினை வழங்கினார்.
நீண்ட வரிசையில் இருந்து பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களிடமிருந்து நூலை அவரது மாணவர்களும், நலன்விரும்பிகளும் பெற்றுக் கொண்டனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊரவர்கள், நண்பர்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.