
கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ‘Lanka Metro Transit’ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன.கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பயணிகளைப் பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.பேருந்துகளுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியமானது என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்
