டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!

டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!

 ருஹுணு பல்கலைக்கழக மாணவியொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46 ஆவது தொகுதி மாணவியான ஹிக்கடுவ விதானகே சந்தலி தாரகா என்ற 24 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாத்தறையின் தெனியாய கலுகலஹேன பகுதியை சேர்ந்த மாணவி இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 29 ஆவது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய இறுதி வாட்ஸ்அப் செய்தியில் தான் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், “நான் இறக்காவிட்டால் கண்டிப்பாக உங்களைப் பார்க்க வருவேன் நண்பர்களே” என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சந்தலிக்கு 18 ஆம் திகதி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் முதலில் தெனியாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் நிலைமை தீவிரமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக அவர் 22 ஆம் திகதி காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 23 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சலால் ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பின் காரணமாக நிகழ்ந்த மரணம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவியின் தாய், தெனியாய மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், தனது மகளின் நோய் மற்றும் இந்த துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மகள் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தாள். அந்த விடுதியில் இருந்த பல குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தொற்றியதை கேள்விப்பட்டதும், நாங்கள் அவளை உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறினோம். ஆனால் அவள், ‘அம்மா, எனக்கு பரீட்சை இருக்கின்றது, நான் எப்படி வர முடியும்?’ என்று கூறி, அந்த விடுதியிலேயே தங்கிவிட்டாள்.

இதன்பின்னர், அவளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டபோது, ​​தந்தை அன்றிரவே சென்று அவளை வீட்டிற்கு அழைத்துவந்தார். நான் ஒரு செவிலியராக இருந்து, அவளுக்கு அருகிலேயே இருந்து அவளைப் பராமரித்தபோதிலும், என்னால் மகளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *