உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் இயக்குனர் அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலே இறந்து போனவர்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இலங்கை தீவில் அநீதிக்கு எதிரான குரல்கள் காலத்திற்கு காலம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றால் இதனுடைய அர்த்தம் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

 மனித மாண்பும் மனித நேயமும் மனித உரிமைகளும் மதிக்கப்படுவதாக தெரியவில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்கின்ற நிலைப்பாடு எதைச் சொல்லுகிறது என்றால் இதற்கு முன்பாக பல தடவைகள் ஆலயங்கள், கோவில்கள் இலக்குவைத்து தாக்கியழிக்கப்பட்ட பொழுதும் அதற்குள் தஞ்சம் அடைந்த மக்களின் உயிர்கள் மிலேச்சத்தனமாக காவு கொள்ளப்பட்ட வேளையிலும் காத்திரமான நீதி தீர்ப்புகள் அப்பாவி மக்களுக்காக வெளிப்படுத்தப்பட்டிருந்தால் இப்படி இன்னுமொரு கொடூரமான தாக்குதலை நாடு எதிர்கொண்டிருக்காது.

ஆக. காலம் தாழ்த்தி வருகின்ற நீதியும் மறுக்கப்பட்ட நீதியும் இன்னுமொரு வன்முறை நடந்தேற மறைமுகமாக இடமளித்திருக்கிறது. பெரும்பான்மை” உணர்வும், அதிகாரமும், வலுவும் ஒரு பொழுதும் அடிப்படை மனித உரிமைகளை மறைத்து விட முடியாது. இலங்கைத் தீவு பல் தேசிய இன. மத, கலை, கலாசார மற்றும் வாழ்வியல் பின்னணியை கொண்ட ஒரு வலுவான நாடு என்கின்ற சூழலை இந்த “பெரும்பான்மை” மனநிலையும் அதிகாரமும் மாற்றி அமைப்பது ஆரோக்கியமானது அல்ல. நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்ட சமூக, அரசியல் தலைவர்களை நாங்கள் உருவாக்க தவறிவிட்டோம். 

நவாலி செயின்ட் பீட்டர் ஆலயத்திலும் குருநகர் யாகப்பர் ஆலயத்திலும் அகோரத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பொழுது நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் இன்னுமொரு மிலேச்சத்தனமான தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆக, எங்கே எல்லாம் மனிதம் மரிக்கின்றதோ, குழிதோண்டி புதைக்கப்படுகின்றதோ, மனித மாண்பு மீறப்படுகின்றதோ அங்கே இன மத மொழி கடந்து சிந்திக்கின்ற காத்திரமான மனநிலைகள் உருவாக்கப்பட வேண்டும். காலம் தாழ்த்தப்படுகின்ற, மறுக்கப்படுகின்ற நீதியால் இன்னும் ஒரு வன்முறைக்கு இடம் கொடாமல் இருக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் நீதியை நிலை நாட்ட வேண்டியவர்களின் கடமை என்பதை நீதி சமாதான பணியகம் வலியுறுத்தி இந்த மிலேச்சத்தனமான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மரித்துப்போன உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்தனை செய்கிறது.

அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி

இயக்குனர்

சமாதான நல்லிணக்க பணியகம்,

கனகபுரம்,

கிளிநொச்சி. என்றுள்ளது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *