தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

 வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தங்குமிட விடுதி கட்டுமான வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

தற்போது அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த 800 மாணவர்கள் கல்வி பயிலும் இந்த நிறுவனம், வடக்கு மாகாண மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து எனக் குறிப்பிட்ட ஆளுநர், இங்கு ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதால் இந்நிறுவனத்தை வலுப்படுத்தி முழுமையாக இயங்கச் செய்வது அனைவரதும் பொறுப்பு என வலியுறுத்தினார்.

தொழில் சந்தையின் நவீன தேவைகளுக்கு ஏற்ப மெக்கட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தேசிய தொழிற்றகைமை மட்டம் 4, 5 மற்றும் 6 கற்கைநெறிகளை ஆரம்பிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது

என்.வி.க்யூ. 5 மற்றும் 6 கற்கைகளுக்காக இலங்கை மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனைத் துரிதமாகப் பெற்று கற்கைகளை ஆரம்பிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

விரிவுரையாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களது சம்பள மீளாய்வு (2025 ஏப்ரல் முதல் நிலுவை), கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் தொடர்பான விடயங்கள் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான தீர்வு வழங்கப்படும் எனவும் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் நிர்வாக சபையில் உள்ளூர் பிரதிநிதித்துவத்தின் அவசியம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நியமனங்கள் கௌரவ அமைச்சருக்குரியது என்பதால், அதற்கான பரிந்துரைகளைத் துறைசார் அமைச்சரான மாண்புமிகு பிரதம மந்திரியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, 30 கற்கைநெறிகளில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயிலும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் நிலைமைகள் ஆராயப்பட்டன. கல்லூரியின் கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுவதையும், சில கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளமையையும் நேரில் பார்வையிட்ட ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அங்குள்ள உபகரணங்கள் காலத்துக்கேற்ப நவீனமயப்படுத்தப்படாமல் பழமையானதாக உள்ளமையையும் அவர் குறிப்பிட்டார். மோட்டார் வாகனம் மற்றும் குழாய் திருத்துனர் உள்ளிட்ட சேதமடைந்த ஆய்வுகூடங்கள், கணினித் தேவைகள் மற்றும் வகுப்பறைகளின் பற்றாக்குறை ஆகியன தொடர்பில் கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட தரப்பினரால் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

கொரிய அரசால் அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியின் திருத்தப் பணிகளுக்காக இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டடங்கள் திணைக்களத்தினூடாகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி அடுத்த ஆண்டுக்கான பிரதான திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதால், புதிய கட்டடங்கள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்புத் தேவைகள் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேவையான உபகரணங்களை உரிய காலத்தில் சரியான பொறிமுறையூடாகக் கோருவதன் மூலம் தாமதங்களைத் தவிர்க்க முடியும் எனவும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விசேட கலந்துரையாடலில், திறன்கள் அபிவிருத்தி அமைச்சு, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஆகியவற்றின் மேலதிக செயலாளர்கள், பணிப்பாளர் நாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் சூம் தொழில்நுட்பம் ஊடாகப் பங்கேற்றனர்.

ஆளுநர் செயலகத்தில் நேரடியாக இடம்பெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர், விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *