மன்னார் வைத்திய சாலையில் இடம்பெற்ற மனிதநேய மகத்துவம் மிக்க செயல்!!

மன்னார் வைத்திய சாலையில் இடம்பெற்ற மனிதநேய மகத்துவம் மிக்க செயல்!!

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன், நோயாளியின் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்த மகத்தான முடிவு, பல உயிர்களுக்கு புதிய நம்பிக்கையையும் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம்.கனீபா தெரிவித்துள்ளார்.

  இரு சிறுநீரகங்களையும் நீண்டகாலம் சிறுநீரகங்கள் பழுதடைந்த இருவருக்கு வழங்கி அவர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு வாழ்வளித்த மகத்தான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடையாகும். மன்னாரில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும் என்ன மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த மனிதநேய செயலில் பங்களித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொண்ட யாழ்.போ.வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *