அனோஜன் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள்!!

அனோஜன் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள்!!

 இலங்கை மற்றும் சவுதி சட்டக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடர்ந்து, இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் இன்று(11.10.2026) சவுதி அரேபியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் ஒருங்கிணைப்புடன், இலங்கை சட்டத்தரணிகளின் சிறப்புக் குழுவிற்கும் அவர்களின் சவுதி சகாக்களுக்கும் இடையே பல சுற்று ஆலோசனைகளுக்குப் பின்னர், இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இந்த சட்ட நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றின் காரணமாக, சவுதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தொடக்கத்தில் கீழ் நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இருப்பினும், மேன்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து மரண தண்டனையை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவைத் தயாரிப்பதில் உதவுவதற்காக இலங்கையிலிருந்து ஒரு சிறப்புக் சட்டக் குழு சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளது.

இலங்கை சட்டக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அஸார்ட் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் குமாரப்பெரும மற்றும் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தூதுவர் அமீர் அஜ்வாட், ஜெட்டாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் நீதிபதி மொஹமட் லஃபீர் மற்றும் சில்மி ரியாஸ்தீன் ஆகியோரும் இந்த சட்ட முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சவுதி தலைநகரில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கான அவர்களது திட்டமிடப்பட்ட திரும்புதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், இலங்கை சட்டக் குழுவினர் தற்போது ரியாத்தில் சிக்கியுள்ளனர்.

சவுதி உயர் நீதிமன்றம் அந்நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அதிகார அமைப்பு என்பதால், இது முக்கியமாக சட்ட மற்றும் நடைமுறை அடிப்படையில் கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மீளாய்வு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *