
வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களில் சுமார் 10 பேரில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது, கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கண்டறிதல்கள் அடங்கிய அறிக்கையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு மருத்துவ நிபுணர் எம்.மலரவன் நேற்று(26.10.2026) ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கையளித்துள்ளார்.
கடந்த ஜூலை 21ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 23ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் இரண்டாம் கட்டம், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள 13 கல்வி வலயங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்போது மொத்தம் 14,997 முதலாம் தர மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இது மொத்த முதலாம் தர மாணவர்களில் 92.6 வீதமாகும்.
கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 1,455 பேருக்கு (9.7 வீதம்) ஒளிவிலகல் பிழைகள் எனப்படும் பார்வைக் குவியக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் 129 மாணவர்கள் (8.9 வீதம்) மட்டுமே ஏற்கெனவே மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தனர். ஏனைய 1,326 மாணவர்கள் (91.1 வீதம்) மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கவில்லை.
மேலும், பார்வைக் குவியக் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஏனைய கண் பிரச்சினைகளும் மாணவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால் சில மாணவர்களுக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகள், கண் நிபுணர்களின் ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்புகள் தேவைப்படலாம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1,199 மாணவர்கள் கண் பரிசோதனையில் பங்கேற்கவில்லை என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலைகள் அருகிலுள்ள கண் மருத்துவ நிலையங்களைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மூக்குக்கண்ணாடி அணியுமாறு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள் அவற்றைத் தொடர்ந்து அணிவதையும், மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுவோர் அவற்றைத் தாமதமின்றிப் பெற்றுக்கொள்வதையும் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாணவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்த கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
