
வர்த்தகர் ஓருவரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் மதிப்பீட்டாளர் ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வரித் தொகையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபா லஞ்சம் கோரி, அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்தத் தண்டனையை விதித்துள்ளதுடன், பிரதிவாதியின் குடியுரிமையை 7 ஆண்டு காலத்திற்குப் பறிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கை மூலம் அறிவிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய பிரதிவாதிக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் வருடாந்தம் அறவிடப்பட வேண்டிய வரித் தொகையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக 4 இலட்சம் ரூபா லஞ்சம் கோரி, அதில் 3,75,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இலஞ்ச வழக்கு தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறைப்பாட்டுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.