
ஜப்பானின் நரிட்டாவை நோக்கி நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 454 விமான சேவை எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென இரத்து செய்யப்பட்டமையால், பயணிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் வராததன் காரணமாக, மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக நரிட்டா விமான நிலையத்தில் காத்திருந்த 250க்கும் மேற்பட்ட பயணிகள் ஜப்பானில் சிக்கி தவித்ததாக தெரியவந்துள்ளது.
விமானம் இரத்து செய்யப்பட்டதால் மாற்றுப் பயண ஏற்பாடுகள் அல்லது ஹோட்டல் தங்குமிடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் இரு நாடுகளிலும் உள்ள பயணிகள் கடும் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் நான்கு 4 பெரிய ரக விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இவ்வாறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது
மேலும் பிராந்திய பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிறிய ரக விமானங்களின் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக சேவையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆறு முக்கிய விமானங்கள் ஒரே நேரத்தில் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது, முழு சர்வதேச விமான கால அட்டவணையும் வரிசையாக சீர்குலைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
