வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!

வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவரின் உடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மாலை நடத்தப்பட்டது.

இவர் தன்னை தானே, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், உடலில் எந்தவிதமான சந்தேகத்திற்குரிய காயங்களும் இல்லை என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன்,தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர், உறவினர்கள் உடலத்தை ஏற்க மறுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரச செலவில் உடலத்தை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மரண தண்டனை கைதியான, பூபாலசிங்கம் ஜெயக்குமார் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள், மற்றுமொரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் குறித்த வழக்கு மீதான தீர்ப்பை ஏகமனதாக அறிவித்தனர்.

அதன்போது 09 எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. எனினும், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி, இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாதமையால் , குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும் , 30 வருடங்கள் கடூழிய சிறை தண்டனையும் விதித்தும் தீர்பளிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பினை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றில் மேன் முறையீடும் செய்யப்பட்டது.

எனினும், மரண தண்டனை கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கடந்த ஆறாம் திகதி, அவர்களுக்கான மரண தண்டனையை மீள உறுதி செய்தது.

இந்தநிலையில் , தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் தீர்ப்பினை மீள அறிவிப்பதற்காக குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்றுஅழைக்கப்பட்டது.

அதற்காக நீதிமன்றில் குற்றவாளிகளை முற்படுத்த ஏதுவாக குற்றவாளிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்து இருந்த நிலையில், பூபாலசிங்கம் ஜெயக்குமார் நேற்று அதிகாலை தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *