
வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார். முன்னாள் வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணிகளைத் திறம்படச் செய்தல், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுதல் மற்றும் நச்சுப் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், அதனை விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று (3) சென்னையில் முதலமைச்சர் ஜோசப் சி.விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது எழுத்துமூலமாக கோரிக்கை கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம்,
இந்திய – ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட குழு கலந்துகொண்டது.

