செம்மணி விவகாரத்தில் வெளிவரும் முரண்பாடான கருத்துகள்!!

செம்மணி விவகாரத்தில் வெளிவரும் முரண்பாடான கருத்துகள்!!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை அவசியமானது என்றும், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, அதற்கான சட்ட ரீதியான மாற்றீட்டை முன்வைக்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னர் அவர் சமர்ப்பித்த இரு அறிக்கைகளிலும் ‘மனிதப் புதைகுழி’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், அங்கு குற்றச் செயல்கள் நடைபெற்றமைக்கான சான்றுகள் மற்றும் தடயங்கள் இருப்பதாகவும் அவரே சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது இடைக்கால அறிக்கையில், அதற்கு மாறுபட்டதொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தொல்லியல் நிபுணரால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மட்டுமே.

சர்வதேச மேற்பார்வை இன்றி முன்னெடுக்கப்படும் இவ்வாறான அகழ்வாராய்ச்சிகளில், ஒருவர் திடீரென இத்தகைய அறிக்கையைச் சமர்ப்பிப்பது உண்மைத் தன்மையையே சந்தேகத்துக்கு உள்ளாக்குவதுடன், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.

எனவே, இந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடரும்போது சர்வதேச நிபுணத்துவம் கட்டாயம் அங்கு இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையானது சர்வதேச நிபுணத்துவத்தின் அவசியத்தை மேலும் வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.

அறிக்கையிலுள்ள முரண்பாடான கருத்துக்கள் தொடர்பாக வரும் நாள்களில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த சுமந்திரன், “நான் ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி பல முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் நீதிமன்றத் தவணையின்போது இந்த அறிக்கை தொடர்பான எமது அவதானிப்புகளையும் ஆட்சேபனைகளையும் முறைப்படி நீதிமன்றத்தில் முன்வைக்க உத்தேசித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *