
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
