
இந்துக் கோயில்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதுதான் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டமா?
ஏறாவூர் நகர சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் துணை போகின்றதா? — பிரதி தவிசாளர் ஞா.கஜேந்திரன் கேள்வி
“இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டுவதுதான் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டமா?” என ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவதாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘நாட்டை தூய்மைப்படுத்துவோம்’ என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான நடவடிக்கையா? அல்லது குப்பைகளை சேகரித்து இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதற்கான திட்டமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த 03.09.2026 அன்று நடைபெற்ற செங்கலடி ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் குப்பைகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதில்லை என நகர சபை தவிசாளர் நளீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதி தவிசாளர் என்ற வகையில் நான் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று, அங்கு இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதை ஆதாரபூர்வமாக பதிவு செய்து, அதனை நகர சபை தவிசாளர் மற்றும் சபை அமர்வில் முன்வைப்பதற்காக சென்றேன்.
அப்போது, அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி ஒருவர் என்னைத் தாக்கினார். பின்னர், நகர சபை ஊழியர்களைத் தூண்டிவிட்டு கழிவுகளை அகற்றமாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தப்பட்டபோது, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்கள் அங்கு உடனடியாகச் சென்றார்.
எனினும், அங்கு அவர் அவர்களின் தரப்பு நியாயங்களை மட்டுமே கேட்டதாக எனக்குத் தெரிகிறது.
நான் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், என்னுடன் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், இந்தக் குப்பைப் பிரச்சினை தொடர்பாக எனது தரப்பில் உள்ள நியாயமான கருத்துகள் குறித்து ஒரு வார்த்தைகூட என்னிடம் கேட்கவில்லை.
அதுமட்டுமன்றி, இந்தக் குப்பைப் பிரச்சினையால் எமது மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அந்தக் குப்பை மேட்டைப் பார்வையிடுவதற்கும் அவர் செல்லவில்லை.
எமது கிராமம், எமது மக்கள், எமது பிள்ளைகள் மற்றும் எமது வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில், எமது தரப்பில் நியாயம் இருக்கும்போது, பல அதிகாரிகள் இந்தக் குப்பை மேட்டை மூடுமாறு ஏற்கனவே பல தடவைகள் கடிதங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது அவ்வாறிருக்கையில், அந்தக் குப்பை மேடு ஏன் இன்னும் மூடப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.
நியாயம் கேட்கச் சென்ற என்னைத் தாக்கியவர்களுடன் நின்று அவர்களின் தரப்பு நியாயத்தை மட்டும் பேசுவது சரியானதா?
நடுநிலையாக இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு, பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் எமது தரப்பின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.
மேலும், தவிசாளர் நளீம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு முன்னிலையில் ஊடகங்களுக்கு, “இரண்டு சமூகங்களுக்கு இடையில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
நான் கேட்கிறேன் எது இனவாதம்? எது மதவாதம்?
எமது இந்து ஆலயங்களுக்கு அருகில், பாடசாலைகளுக்கு அருகில், நூலகங்களுக்கு அருகில் மற்றும் நீதிமன்றத்திற்கு அருகில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்ட வேண்டாம்; அது எமது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; அதேபோன்று ஆற்றங்கரைப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறுவது இனவாதமா? மதவாதமா?
அல்லது, “யார் என்ன கூறினாலும் எங்களது நோக்கம் நிறைவேறும் வரை குப்பைகளை அங்கேயே கொட்டுவோம்” எனக் கூறி, அதனைத் தடுக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்திவிட்டு பின்னர் ஓடிச் சென்று போராட்டம் நடாத்தி இனவாதம், மதவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார் என என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துவது இனவாதமா?
எது இனவாதம், மதவாதம் என்பதை தவிசாளரும், அவருக்கு அருகில் இருந்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபுவும் புரிந்துகொள்ள வேண்டும்.
நகர சபையின் பிரதி தவிசாளர் என்ற வகையில் பத்து வட்டார மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் சகோதர சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். அவர்களும் இந்தக் குப்பை மேட்டினால் மோசமான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே, இதனை முதலில் இன, மதப் பிரச்சினையாக பார்க்காமல், மக்களின் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.
எமது பத்து வட்டாரங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக வகைப்படுத்தி, ஏறாவூர்ப்பற்று கொடுவாமடுவில் அமைந்துள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திடம் கையளிக்க முடியும்.
அதேபோன்று, அரசாங்கத்துடன் பேசி பொருத்தமான இடம் ஒன்றைத் தெரிவுசெய்து, ஏறாவூர்ப்பற்று போன்று எமது பகுதிக்கும் முறையான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் ஒன்றை அமைக்கலாம். அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
இந்தக் குப்பைப் பிரச்சினைக்கு பிரதி தவிசாளர் என்ற வகையில் நானும் தீர்வுகளை முன்வைக்கத் தயாராக இருக்கின்றேன். பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில், இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்னுடனும் கலந்துரையாடியிருக்கலாம்.
ஆனால், எமது தவிசாளரின் நோக்கம் சிலரது தனியார் காணிகளை நிரப்புவதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் காணிகளில் குப்பைகளை கொட்டி அவற்றை நிரப்பி புதிய நிலப்பரப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் நான் குற்றஞ்சாட்டுகின்றேன்.
ஏற்கனவே பல ஏக்கர் காணிகள் இவ்வாறு நிரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆற்றங்கரை, சதுப்பு நிலம் மற்றும் வயல் நிலங்களை குப்பைகளைப் பயன்படுத்தி நிரப்பி தனியார் காணிகளாக மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தால், அவை உடனடியாக நிறுத்தப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்தச் செயற்பாடுகளுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு துணை நிற்பதாக தோற்றம் ஏற்படுத்தும் வகையில் அவரை அழைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் நான் கருதுகின்றேன். அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத நில நிரப்புதல் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு முழுமையான தகவல்கள் தெரியாமல் இருக்கலாம்.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நான் கேட்பது ஒன்றுதான்:
ஆற்றங்கரை, சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் நிலங்களில் குப்பைகளை கொட்டி அவற்றை நிரப்பி தனியார் காணிகளாக மாற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியுமா?
ஏற்கனவே குப்பைகளை கொட்டி நிரப்பப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் உரிய விசாரணை நடத்தி, அவை சட்டவிரோதமாக நிரப்பப்பட்டிருந்தால் அவற்றை மீளப் பெற்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் இந்த விடயத்தில் நடுநிலையாக இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு வாக்களித்த மக்கள் உட்பட பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பதும், கேள்வி கேட்பதும், தேவையான இடங்களில் போராடுவதும் எனது கடமை.
மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்புவதை இனவாதம் அல்லது மதவாதம் எனக் கூறி எங்களை அடக்க முயற்சிக்கக் கூடாது.
இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நகர சபையின் செயற்பாடுகளுக்கு துணைபோகின்றதா என்ற சந்தேகம் தற்போது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
