
லண்டனில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் ( TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ரகத்திற்கு முன்பாக (13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.
1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமையுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
