மூடிமறைக்கும் அரசின் திட்டமா – கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!

மூடிமறைக்கும் அரசின் திட்டமா – கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் இனவாத திட்டத்தை நடைமுறைப் படுத்த அரசு முயற்சியா? பண்ணையாளர்களை 1570 ஏக்கருக்குள் முடக்கிவிட்டு விவசாய குடியேற்றத்தை செய்யப்போகிறதா அரசு! – செ. நிலாந்தன்

மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத விவசாய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் உருவாகி உள்ள முறுகல் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது.

மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய வெளியேற்றப்பட்ட நிலையில்
அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்காக 1570 ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓரிரு மாதங்களுக்குள்ளேயே குறித்த காணிகளுக்குள் மீண்டும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குழுக்கள் உள் நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் அதனை தடுக்க முயற்சித்த பண்ணையாளர்களுக்கும் சட்ட விரோதமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மேற்படி பிரதேசங்களுக்கு பொறுப்பான அரச நிர்வாகமோ, பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு தரப்பினரோ இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் சுமார் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கருக்கு காணிகள் காணப்படுகிறது .

இதில் வெறும் 1570 ஏக்கர் காணிகளை மாத்திரமே கால்நடை பண்ணையாளர்களுக்கு வழங்கி உள்ளனர். இது பண்ணையாளர்களின் கால்நடைகளை வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.

இன் நிலையில் மீதி காணிகளை மகாவலி அபிவிருத்தித் திணைக்களமும்,வன இலாகா திணைக்களமும் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுகிறது.

விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரலாற்றில் அது ஒரு நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்களுக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்கும் திணைக்களமாக உள்ள நிலையில் மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பிரதேசங்களிலும் அவ்வாற குடியேற்றம் ஒன்றிற்கு மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட ரீதியான அங்கிகாரம் துணை போகுமா அதற்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு வழங்குமா என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஆட்சியாளர்களை மீறி தொடர்ந்தும் எவ்வாறு நடைபெற்று வருகிறது.

எம்மை பொறுத்தவரை இந்த விடயத்தை அரசியலாக்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜெயம்பத் முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது? இதற்கு தற்போதைய அரசாங்கமும் துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் குறித்த பிரதேசத்தை அம்பாறை மாவட்டம் என கூறி சில பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் சிங்கள குடியேற்றம் ஒன்றை மேற்கொள்ள முயன்ற போது குறித்த சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக நாம் போராட்டம் நடத்தியதோடு மிக கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில். அப்போதைய அரசாங்க அதிபர் சார்ள்ஸ் அம்மையார், தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக சென்று மட்டக்களப்பு எல்லை பிரதேசங்களை வரையறுத்து அடையாளப்படுத்தியதோடு குறித்த பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருவதால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாரு அதிகாரிகளுக்கும் பொலீசாருக்கும் உத்தரவிட்டிருந்தனர்.

பின்னர் உருவான நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அந்த பிரதேசங்களுக்கு வரவே இல்லை.

அதன் பின்னர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி ஆகிய பின்னர் அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த அனுராதா யஹம்பத் அவர்களின் தலைமையில் சில பௌத்த பிக்குகள் இணைந்து மீண்டும் ஒரு சிங்கள குடியேற்ற முயற்சியை அந்த பகுதிகளில் மேற்கொண்டனர்.

இதனை ஊடகங்கள் வாயிலாக நாம் வெளிக்கொண்டு வந்து அதற்கு எதிராக செயற்பட்டதன் காரணத்தினால் நான் உட்பட சில ஊடகவியலாளர்கள் மீது அப்போதைய ஆளுனர் பொலீசாரை தூண்டி விட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

இருந்தும் குறித்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக தமிழரசுக் கட்சி நீதிமன்றம் சென்றதன் காரணமாக நீதிமன்றம் அந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான வாக்காளர் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை கோரி இருந்தது ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குறித்த குடியேற்ற வாசிகளை சட்டவிரோத குடியேற்ற வாசிகள் என்ற அடிப்படையில் அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னரும் தனது முயற்சியை கைவிடாத முன்னாள் ஆளுநர் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை வைத்து அந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார், இதனால் அந்த பகுதிகளில் கால்நடைகளை மேய்த்து வந்த தமிழ் பண்ணையாளர்களுக்கும், சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிங்கள குழுக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

குறித்த முறுகல் நிலையை தீர்ப்பதாக கூறி களத்தில் இறங்கிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜெயம்பத் அவர்கள் கால்நடை பண்ணையாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், நாட்டு மாடுகளுக்கு பதிலாக பால் கூடுதலாக தரக்கூடிய பண்ணை மாடுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதாகவும் அதற்கான சந்தை வாய்ப்பை பெற்று தருவதாகவும் கூறினார். அத்தோடு இந்த பகுதியில் உள்ள நாட்டு மாடுகளை குறைத்து பண்ணை மாடுகளை அதிகரித்து அடைத்து வளர்க்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாகவும் அதற்கு பண்ணையாளர்களிடம் அனுமதி கோரி இருந்தார். ஆனால் அதற்கு பண்ணையாளர்கள் இணக்கம் தெரிவிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருந்தார்.

இதன் பின்னர் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக குறித்த பகுதியில் விவசாய குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக தமிழ், முஸ்லீம் விவசாயிகளை உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன அதே நேரத்தில் குறித்த சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குடும்பங்களுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கான காணிகளை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கு தடையாக இருந்த கால்நடை பண்ணையாளர்களை குறுகிய பிரதேசங்களுக்குள் முடக்கி விட்டு விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கி, சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு சட்டரீதியான அங்கிகாரத்தை வழங்குவதற்கு தயாரானார்.

ஆனால் இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இவர்களது திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆட்சியில் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த அனுராதா யஹம்பத் பதவி விலக்கப்பட்டார். இதன் பின்னர் பிரச்சினை மிகவும் பூதாகரமாக வெடித்தது.
பண்ணையாளர்களின் போராட்டம், தமிழரசுக் கட்சியின் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அத்துமீறிய சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு அவர்களது மாவட்டங்களிலேயே விவசாய நடவடிக்கைகளுக்கான காணிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உத்தரவு பிரப்பித்தார்.

ஆனால் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதிகாரிகள் எதனையும் நடைமுறைப் படுத்தவில்லை.

ஆனால் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் அவர் இன்று வரை அந்த பகுதியில் எப்படியாவது சிங்கள மக்களை குடியேற்ற வேண்டும் என்ற முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றார் அத்துடன் குறித்த சட்டவிரோத குடியேற்ற பிரச்சியையை அரசியலாக்கி அதனை தமிழ் சிங்கள இன பிரச்சினையாக மாற்ற முயற்சி செய்து வருகின்றார்.

அண்மையில் குறித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜெயம்பத் தலைமையிலான அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் அந்த மக்களை அவர்கள் அரசியல் ரீதியாக தூண்டி விடும் பேச்சுக்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் எந்த வித முரண்பாடுகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான சுமுகமான உறவு நிலவுகிறது.

இந்நிலையில் வரலாற்று ரீதியாக எந்த வித சட்ட ரீதியான ஆவணங்களும் இல்லாத சில குழுக்களை தங்களது அரசியல் தேவைகளுக்காக நீதிமன்ற தீர்ப்பையும் மீறி அத்து மீறிய சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை தூண்டி விட்டு அவர்களுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டும் முயற்சிகளை அரசாங்கம் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

நீதி மன்ற தீர்ப்பு ஒன்று நடைமுறையில் இருக்கும் போது அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலீசார்,அரச நிர்வாகத்தினர் அதனை நடைமுறைப் படுத்தாது வேடிக்கை பார்ப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

அதேபோல் சட்ட விரோத குடியேற்றம் ஒன்றிற்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்கும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியே உள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத ஜெயம்பத் அவர்களின் இனவாத செயற்றிட்டங்களுக்கு தற்போதைய அரசு அனுமதி வழங்கப்போகிறதா ? என்ற கேள்வி எழுகிறது.

மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் சுமார் 17 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகள் காணப்படுகிறது இதில் வெறும் 1570 ஏக்கர் காணிகளை மாத்திரமே கால்நடை பண்ணையாளர்களுக்கு வழங்கி உள்ளனர். இன் நிலையில் மீதி காணிகளை மகாவலி அபிவிருத்தித் திணைக்களமும்,வன இலாகா திணைக்களமும் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி உள்ளது.
விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரலாற்றில் அது ஒரு நில ஆக்கிரமிப்பு சிங்கள குடியேற்றங்களுக்கு சட்ட ரீதியாக துணை போகும் திணைக்களமாக உள்ள நிலையில் மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பிரதேசங்களிலும் அவ்வாற குடியேற்றம் ஒன்றிற்கு மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட ரீதியான அங்கிகாரம் துணை போகுமா அதற்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு வழங்குமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. என்றார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *